"ஆசிரியர்களை கைது செய்தது கொடுங்கோன்மை" சீமான் ஆவேசம்!

பேனா சிலை வைக்க நிதி இருக்கிறது, ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா..?

ஆசிரியர்களை கைது செய்து அடைத்திருப்பது கொடுங்கோன்மையான செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக் கல்விதுறை வளாகத்தில் கடந்த 11 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை இவர்களை கைது செய்த காவல்துறையினர் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நல கூடத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்களை அடைத்தனர். 

இந்நிலையில் அவர்களை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆசிரியர்களுக்காக ஆசிரியர்கள் தான் போராட வேண்டும், உழவர்களுக்கு பிரச்சனை என்றால் உழவரும், மாணவருக்கு பிரச்சினை என்றால் மாணவரும் போராடிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் ஆட்சியாளருக்கு வசதியாக போய்விட்டது எனக் கூறினார்.  அறிவில்லாதவன் கையில் எது கிடைத்தாலும் அது பயனற்றது அதற்கு சான்று இந்த ஆட்சி தான் என சாடிய அவர், தேர்தல் நேரத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைதான் நிறைவேற்ற சொல்லி கேட்கிறார்கள் எனவும் நிறைவேற்ற  முடியாத கோரிக்கை ஒன்றும் இல்லை எனவும் கூறினார். மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற 50 கோடி தான் செலவாகும் என தெரிவித்தார்.  

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தாமல் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வைத்திருக்கிறார்கள் இது என்ன கொடுமை என தெரிவித்த அவர், ஆசிரியர்களை கைது செய்து அடைத்திருப்பது கொடுங்கோன்மை எனக் கூறினார். 

நினைவிடம் கட்ட நிதி இருக்கிறது, பேனா சிலை வைக்க நிதி இருக்கிறது, தேர்தலில் பணம் கொடுக்க நிதி இருக்கிறது, ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட போராட உரிமை இருந்தது ஆனால் தற்போது விடுதலை பெற்ற இந்தியாவில் போராட கூட அனுமதி இல்லை. இதைவிட ஒரு கொடுங்கோன்மை வேறென்ன இருக்க முடியும் என கூறிய அவர், நிதி இல்லை என்று வாக்குகளுக்கு தேர்தல் நேரத்தில் பணம் கொடுக்காமல் நேர்மையாக தேர்தலை சந்திக்க முடியுமா?  என கேள்வி எழுப்பினார். மேலும், நான் படித்த பள்ளிக்கூடம் சிதிலமடைந்து இருந்தது அதனை நான் சரி செய்து விட்டேன் ஆனால் அதற்கு ஆசிரியர் இல்லை என்றார். 

இதையும் படிக்க:2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் சரிவிற்கு காரணமான அரசு ஊழியர்கள் போராட்டம்!