தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சி -வேல்முருகன்

தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சி -வேல்முருகன்

தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.  


நிலக்கரி சுரங்கம் அமைப்பது மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக இன்று சட்டப்  பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுவரப்பட உள்ளது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் இருக்கின்ற பொழுது, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல், குறைந்தபட்சம் தமிழ்நாடு அரசுக்கு முறைப்படி தகவல் கூட தெரிவிக்காமல், மத்திய அரசு கடந்த மார்ச் 29ம் தேதி நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக  மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு உள்ளடக்கிய  20 கிராமங்களில் 21,000 ஏக்கர் நிலங்களையும், அரியாலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி உள்ளடக்கிய 3 கிராமங்களில் 3500 ஏக்கர் நிலங்களும், தஞ்சை மாவட்டம் வடசேரியை உள்ளடக்கிய 11 கிராமங்களில் 17,000 நிலங்களும் ஏலத்திற்கு விடப்படுவதாக அறிவித்துள்ளது. 

ஏலம் யாரும் எடுக்க முன் வரவில்லை என்பதால் நாம் தப்பித்திருக்கிறோம். ஒருவேளை அதானிகளோ அம்பானிகளோ ஏலம் எடுத்திருந்தால், இந்த டெல்டா பகுதி மக்களின் வாழ்வுரிமைகளை எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணப்பதை கற்பனையில் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை. மத்திய அரசு தொடர்ச்சியாக எதேச்சாதிகார போக்கை கடைபிடித்து தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என பேரவையில் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக தமிழ்நாட்டில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிழக்கு அரியாலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தஞ்சை மாவட்டம் வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

புதிய நிலக்கரி சுரங்கம் பற்றி சட்டப்பேரவையில் கண்டிப்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதனை ஒட்டி இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான விவாதம் நடைபெற்று வருகிறது.