சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை உட்பட 4 மாவட்டங்களின் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 2-ம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்கிறார்

முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2 நாட்கள் ஆய்வு கூட்டம் நேற்று தொடங்கியது. 

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற  கள ஆய்வு  கூட்டத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில்  வளர்ச்சி  திட்டப்பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். போதை பொருட்கள் தடுப்பு  நடவடிக்கையில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

4 மாவட்டங்களில் சாலை விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும்  குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களை கண்காணிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கேட்டுகொண்டார்.  .

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளாா்.