கஞ்சா ஒழிப்பு வேட்டை.. "அதிரடி காட்டி வரும் காவல்துறை" பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் பறிமுதல்!!

தமிழகம் முழுவதும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையினர், பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கஞ்சா ஒழிப்பு வேட்டை.. "அதிரடி காட்டி வரும் காவல்துறை" பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் பறிமுதல்!!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது சந்தேகிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த அன்புச்செல்வன், அஜித்குமார் ஆகியோரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் இருவரிடமும் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிந்த போலீசார், அவர்களது கூட்டாளிகளான ராஜேஷ் குமார், ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது, ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக திருநின்றவூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பிரசாந்த், செய்யது அலி, நாகூர் மைதீன் ஆகியோரை கைது செய்த போலீசார், மொத்தமாக 365 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கைப்பற்றினர்.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட ஒன்றரை கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்த காவல்துறையினர், ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.