தமிழகத்திலும் தொடங்கவுள்ள "கேரவன் டூரிஸம்"
தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழ்நாடு சுற்றுலா துறை ஆராய்ந்து வருகிறது.

இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் "கேரவன் டூரிஸம்" என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. "கேரவன் டூரிஸம்" என்பது கடல், மலை, காடு, என இயற்கையோடு ஒன்றிணைந்து தங்க விரும்பும் சுற்றுலாபயணிகளுக்காக கட்டில் மெத்தை, சமையலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வாகனமாகும்.
இந்த கேரவன் டூரிஸம் முறை பொதுவாக வெளிநாடுகளில் தான் அதிகம் உள்ளது. இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இப்போது "கேரவன் டூரிஸம்" முறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை புதிய இலக்கை அடையும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் மிக நீன்ட கடல் பரப்பை கொண்ட சென்னையில் நீர் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட இன்னும் சில திட்டங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது. அதேபோல் சென்னை தீவுத்திடல் ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் பொருட்காட்சி, கண்காட்சி அரங்கம், வர்த்தக மேளா, என தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி, கொடைக்கானல், ராமேஸ்வரம் உள்ளிட்ட இன்னும் சில சுற்றுலா தலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.