இந்து அறநிலையத் துறை அலுவலகம் முற்றுகை... அண்ணாமலை உட்பட 800 பேர் மீது வழக்குப்பதிவு!!

இந்து அறநிலையத் துறை அலுவலகம் முற்றுகை... அண்ணாமலை உட்பட 800 பேர் மீது வழக்குப்பதிவு!!

அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தியும் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட பாஜகவினர் 800 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். 

சனாதனம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையானது. இந்த நிலையில்  அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வேண்டும் என்றும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் நுங்கம்பாக்கம் சாலையில் அமர்ந்து அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர்  திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.  

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  பாஜகவினரின் தர்ணா போராட்டம் நீடித்ததால்  நுங்கம்பாக்கம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதையடுத்து போலீசார் கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக போராட்டத்தை முடிவுக்கு  கொண்டு வந்தனர். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறையின் பேச்சை ஏற்று போராட்டத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு மக்களுக்காக இந்த போராட்டம் நடத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.