சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி;  ஆணையருடன் மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதம்!

சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி;  ஆணையருடன் மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதம்!

சாலையில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணிகளை ஆய்வு செய்ய சென்ற சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடு உரிமையாளர்கள். விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாடு உரிமையாளர்களுக்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை. 

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி பகுதியில் பள்ளி சென்றுவிட்டு திரும்பிய சிறுமியை மாடுகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து பொது இடங்களில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு 2000 ரூ வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் கால்நடை அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் அருகே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, மாடுகளின் உரிமையாளர்கள் சிலர், வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மாடுகளை பிடித்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆணையர் ராதாகிருஷ்ணன் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுதை கூறி, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மாடுகளை மேய்ச்சலுக்காக சாலையில் திரியவிடக்கூடாது எனவும் தொழுவத்தில் கட்டி வைக்க வேண்டும் எனவும், விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதையும் படிக்க:சிறுமியை சகட்டுமேணிக்கு தாக்கிய மாடு... வைரலான வீடியோ...உரிமையாளர் மீது வழக்கு!