தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 10ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்ககடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.