தாயை விட்டுவிட்டு 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிச்சென்ற அரசு பேருந்து...ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிட மாற்றம் !

கரூர் அருகே மூட்டையை எடுக்கச்சென்ற தாயை விட்டுவிட்டு அவரின் 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிச்சென்ற அரசுப்பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்னர். 

தாயை விட்டுவிட்டு 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிச்சென்ற அரசு பேருந்து...ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிட மாற்றம் !

கரூரை அடுத்த கோடங்கிபடியை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் ஆச்சிமங்கலம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொருட்களை வாங்கி மூட்டைக்கட்டி கொண்டு பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்பகுதி அவ்வழியே வந்த அரசுப்பேருந்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த போது, 4 பெண்கள் குழந்தையுடன் ஏறியதை அடுத்து, குழந்தையின் தாய் மட்டும் கடைசி மூட்டையை எடுக்கச் சென்றார்.

அதற்குள் ஓட்டுனர் பேருந்தை எடுத்துவிட்ட நிலையில், குழந்தை தாயைக் கேட்டு அழுதும் பேருந்து நிறுத்தப்படாததாக தெரிகிறது. தொடர்ந்து குழந்தை அழுதப்படியே இருந்ததால் கோடங்கிபட்டியில் ஒரு பெண்ணையும் அந்த குழந்தையும் இறக்கிவிட்டனர். அதன்பிறகு குழந்தையின் தாய் அடுத்த பேருந்தில் பயணித்து வந்தார். இதனையடுத்து ஆலமரத்துப்பட்டி வரை சென்று திரும்பி வந்த அப்பேருந்தை சிறைபிடித்து நியாயம் கேட்ட மக்கள், ஓட்டுநரும் நடத்துநரும் மன்னிப்பு கேட்கவே பேருந்தை விடுவித்தனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலசவப் பயணம் என்பதால் பெண்களை நடத்துனர்கள் தரக்குறைவாக நடத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து தாயை விட்டுச்சென்ற ஓட்டுநர் பன்னீர்செல்வத்தை காரைக்குடிக்கும் நடத்துநர் மகேந்திரனை தேவகோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.