"உணவு, தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை" முதலமைச்சர் பெருமிதம்!

"உணவு, தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை" முதலமைச்சர் பெருமிதம்!

திமுக ஆட்சியில் உணவு மற்றும் தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கடந்த 8-ஆம் தேதி வேளாண் வர்த்தக திருவிழா நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை 3 நாள் நடைபெறும் 'வேளாண் சங்கமம் - 2023' என்ற பெயரிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் வேளாண் துறை சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 'தமிழ் மண் வளம்'. உழவன் செயலி போன்ற திட்டங்கள் வேளாண் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பழங்கள், காய்கறிகள் சாகுபடியை திமுக தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் கூறினார்.

கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துணை வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பவானிசாகரில் புதிதாக மஞ்சள் ஆராய்ச்சி மையம் இயங்கி வருவதாக கூறினார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுமார் 2 லட்சத்து 20 வேளாண் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒன்றரை லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் வேளாண் பெருங்குடி மக்கள் பலன்பெற காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் எனக் கூறிய முதலமைச்சர், உழவர்கள் வேளாண் உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல், விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்பதற்காக உழவர் சந்தைகள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். வேளாண் துறை மேம்பாட்டிற்காக அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று காண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, இந்த ஆண்டு 75 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி தொகுப்பை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். விழாவின் ஒருபகுதியாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு மற்றும் விருதுகளை வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.

நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், வேளாண்மை, தோட்டக்கலை குறித்த புதிய தொழில்நுட்பங்கள், மரக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு; இளைஞர் படுகாயம்!