ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை....!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்கிறார்..

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை....!!!

சென்னை தலைமை செயலகத்தில் 13ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைப்பெறும் ஆலோசனையில், சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். டிசம்பர் 15ம் தேதியுடன் தற்போதைய  ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில்,  நடைப்பெறும் ஆலோசனையில், கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் இருப்பு, புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்  ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களாக உலக நாடுகளை உருமாறிய கொரோனா வைரஸ் - ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்றும், தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானா, சீனா, இஸ்ரேல், பெல்ஜியம் என உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.. சர்வதேச விமான முனையத்திலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேப்போல், கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது தொடர்பாகவும், வரும் நாட்களில் பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை உடனடியாக சேகரித்து பரிசோதிக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவதோடு,தடுப்பூசி குறைவாக செலுத்திய மாவட்டங்களில், விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட உள்ளது..