தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை வெகுவிமாிசையாக கொண்டாடப்படவுள்ள நிலையில், பள்ளி, கல்லூாிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்துடன் மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகா் ஆகிய பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே சென்னையில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் நேற்று இரவில் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்றனா். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோயம்பேட்டில் இருந்து வரக்கூடிய ஆம்னி பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லாமல் பூந்தமல்லி, நசரத்பேட்டை சென்று வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக செல்லும் சூழல் உள்ள நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல் தாம்பரம் சிறப்பு பேருந்து நிலையத்தில் கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இங்கு நேற்று இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் அதிகளவில் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திக்குள்ளாகினர். மேலும் ஒருசில பேருந்துகளில் இருக்கையை பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் மக்கள் ஏறி சென்றனர். 

பூந்தமல்லி, கே.கே.நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகாித்து காணப்பட்டது. அவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்லும் பேருந்துகளில் ஒருவருக்கொருவா் முண்டியடித்து ஏறி சென்றனா். .