தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.. எத்தனை இடத்தில், எவ்வளவு?.. முழு விவரம்

தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரியளவில் பாதிப்படைவதாக வாகன ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.. எத்தனை இடத்தில், எவ்வளவு?.. முழு விவரம்

தமிழகத்தில், 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, வாகன உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி, 27 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு, ஐந்து முதல் 10 ரூபாய் வரையும், சரக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 20 முதல் 30 ரூபாய் வரையும், 'கன்டெய்னர்' லாரிகள் உள்ளிட்டவற்றிற்கு, 30 முதல் 50 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாத்துார், வானகரம், சூரப்பட்டு, நல்லுார், பரனுார், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், சென்னைக்கு வரும் வாகனங்கள், கூடுதலாக சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுங்கக் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது, வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் என்பதால், மத்திய அரசு சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.