"ஆங்கிலேய ஆட்சியை விட மோசமான ஆட்சி திமுக ஆட்சிதான்" அண்ணாமலை பேச்சு!

"ஆங்கிலேய ஆட்சியை விட மோசமான ஆட்சி திமுக ஆட்சிதான்" அண்ணாமலை பேச்சு!

ஆங்கிலேய ஆட்சியை விட மோசமான ஆட்சி திமுக ஆட்சி தான் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.  

திமுக அரசின் ஊழல்களை  எடுத்துரைக்கும் விதமாகவும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வண்ணமும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பயண யாத்திரையை தொடங்கி தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டு முதற்கட்ட நடை பயணத்தை கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிவகங்கை, மதுரை திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தனது நடை பயணத்தை நடத்தி முடித்த அண்ணாமலை, இரண்டாம் கட்ட நடை பயணத்தை தென்காசியில் இருந்து தொடங்கி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை நிறைவு செய்து நான்காம் நாளான இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்  பாஜக தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்கினார். 

மதுரை - உசிலம்பட்டி சாலையில் உள்ள கொங்கம் பட்டி விலக்கில் இருந்து யாத்திரை தொடங்கிய அண்ணாமலைக்கு வழி நெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர். உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் மூக்கையா தேவர் சிலைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து முருகன் கோவில் அருகே நடை பயண யாத்திரையை நிறைவு செய்து அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பொதுமக்களிடையே உரையாற்றினார். 

வீரம் விளைந்த மண் உசிலம்பட்டி என தனது பேச்சை தொடங்கியவர், குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் இருவரும் தான். ஆங்கிலேயர்களை ஒட ஓட விரட்டிய நீங்கள் சனாதனத்தை பற்றி பேசுபவர்களை விரட்டுவீர்கள் என்பது எனக்குதெரியும். தொடர்ந்து 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், இராமநாதபுரம் எம்பியாகவும்  செயல்பட்டவர் மூக்கையா தேவர். உசிலம்பட்டியில் ஒரே ஒரு குறை நேதாஜி சிலை இல்லாதது தான். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உசிலம்பட்டியில் நேதாஜி சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவை தாரை வார்த்ததாக 1974ல் பாரளுமன்றத்தில் காங்கிரஸ் அமைச்சர்  தெரிவித்த போது எதிர்ப்பு தெரிவித்த மூக்கையா தேவர், தமிழக காங்கிரசாரை பார்த்து தமிழின துரோகிகள் என பேசி வெளிநடப்பு செய்தார். இந்தியாவில் முத்துராமலிங்க தேவருக்கும், பாலகங்காதர திலகர் இருவருக்கு மட்டும் தான் ஆங்கிலேயர்கள் வாய்ப்பூட்டு சட்டம் போட்டனர். சாதாரணமாக பேசக் கூடிய நான் இந்த மண்ணில் வந்தவுடன் உணர்ச்சிவசமாக பேசிக் கொண்டிருக்கிறேன். காரணம், குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து போரடியவர் என்பதால் என பெருங்காம நல்லூர் வரலாற்றை நினைவு கூர்ந்தார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஆங்கிலேயர்கள் போன பிறகு அரக்க கூட்டமாக திமுக வந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியை விட மோசமான ஆட்சி தி மு க ஆட்சி ஆங்கிலேயர்கள் ஊழல் செய்யவில்லை. இந்திய வளங்களை சுரண்டி இங்கிலாந்தில் வைத்தனர். ஆனால் திமுக நமக்கு வரக்கூடிய பணத்தை ஊழல் செய்து  அவர்கள் குடும்பத்திற்காக சேர்த்து வைத்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை 2024 தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என பேசியவர். ஐந்து, ஆறு படங்களில் நடித்த உதயநிதியின் 6 படமும் ஓடவில்லை பணத்திமிரில்  சனாதனத்தை பற்றி பேசுகிறார். தேவர் இருந்தவரை கொட்டத்தை அடக்கியவர்கள், அவர் இல்லாததால் சனா தானத்தை ஒழிப்பேன் என  ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.

2024ம் ஆண்டுக்கான தேர்தல் மோடியின் 9 ஆண்டுகால சாதனைக்கான சாட்சி, இன்னொரு பக்கம் இந்து தர்மத்தை ஒழிப்பேன் கோவிலை மூடுவேன் என ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது. அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என பேசினார். திமுக ஜெயிக்காத ஒரு தொகுதி என்றால், உசிலம்பட்டி தான் திமுகவை நுழைய விடாத மக்கள் 2024 ல் மீண்டும் மோடியை பிரதமராக வேண்டும் என்பதற்காக இத்தொகுதியில் நிற்கக்கக்கூடியவர்களை இந்த தொகுதி மக்கள் தேர்வு செய்வார்கள்.

உசிலம்பட்டி மக்களை பற்றியும் இந்த மண்ணின் சரித்திரத்தைப் பற்றியும் எல்லோரும் தெரிந்து கொள்ளவே இங்கு வந்தேன் என பேசியவர், உதயநிதி ஸ்டாலின் தன்னை கொசு என்று பேசியுள்ளார். ஆனால் உண்மையான கொசு திமுக தான் DMK என்றால் டெங்கு மஸ்கிடோ கொசு என்று அர்த்தம். அதனால், அந்த கொசுவை ஒழிக்க வேண்டும். தலைவர்கள் என்று சொல்லக் கூடிய தகுதி படைத்தவர்கள், முத்துராமலிங்க தேவரும் மூக்கையா தேவரும் தான். அந்த வரிசையில் தகுதி உள்ள ஒரே நபர் பிரதமர் நரேந்திர மோடி தான் என பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிக்க: பல் பிடுங்கிய பல்வீர்சிங் வழக்கு; சிபிசிஐடி குற்றப்பத்திரிகை; கிடப்பில் போட்ட தமிழ்நாடு அரசு?