ஐந்தாயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு : சென்னையில் இரண்டு மடங்காக அதிகரிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஐந்தாயிரத்தை நெருங்கியதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஐந்தாயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு : சென்னையில் இரண்டு மடங்காக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், நேற்றைய நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், நான்காயிரத்து 862  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரண்டாயிரத்து 731 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் தினசரி பாதிப்பு இரண்டு மடங்காக உயர்கிறது. நேற்றுமுன்தினம் ஆயிரத்து 489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று இரண்டாயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 596 பேருக்கும், கோவையில் 259 பேருக்கும், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 688 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 7 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 577 நபர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.