100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு... எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களால் பரபரப்பு...

சூலூர் அருகே புறம்போக்கு நிலம் எனக்கூறி நீதிமன்ற உத்தரவு காரணமாக கட்டப்பட்டு வந்த கோவில்கள் இடிக்கப்பட்ட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு... எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களால் பரபரப்பு...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் வாசுதேவன் குட்டை அருகே வாசுதேவன் கோயில் அமைந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குட்டையின் அருகே உள்ள இந்தக் கோயில் 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறது. இந்த கோவில் இங்குள்ள மக்களால் பராமரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது இந்த சூழலில் கோவிலை சுற்றி உப கோயில்கள் அமைப்பதற்காக பொதுமக்கள் முடிவெடுத்து கோயில் கட்ட தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கோயிலுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை நிலத்துக்கு இந்த கோவில் அருகாமையில் வழித்தடம் செல்வதால் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அந்த நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் கோயில் உள்ள இடம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்படுவதால் நீதிமன்றம் அந்த கோவில்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று வருவாய் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலைக் கட்டிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக உடனடியாக கோயில் இடிக்கப்பட வேண்டும் என்பதால் காவல்துறையினர் சமாதானம் பேசி கோவிலை இடித்தனர்.