கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து... டெல்லி செல்லும் அமைச்சர்!

கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து... டெல்லி செல்லும் அமைச்சர்!

மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் தொடர்பாக டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட  சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை  தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்தது. இதனை கண்டித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில்,  புகையிலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுதி மொழி ஏற்பு,  திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல என கூறினார். மேலும், குறை உள்ளது என தெரிந்தால் அரசு நிச்சயம் அதை சரி செய்யும் எனவும் அவர் உறுதியளித்தார். 

இதையும் படிக்க:"83 மதிப்பெண்ணுக்கும் 84 மதிப்பெண்ணுக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசம்" விளக்கமளித்த இளம் பெண்..! வாழ்த்திய முதலமைச்சர்..!!