தேவர் குருபூஜை: பசும்பொன்னில் தென் மண்டல ஐ.ஜி., ஆய்வு!

பசும்பொன்னில் அக்.30 ல் நடைபெறவிருக்கும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி., க.ச. நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் அக்.30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா, மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ள இருப்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் க.ச. நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேவரின் பூர்வீக வீடு, புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும் பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடம், முக்கிய பிரமுகர்களின் வழித்தடம், காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ள கட்டடங்கள், போலீசாரின் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, எஸ்.பி.அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளர் சரவணபாண்டியன், கமுதி காவல்துணைக் கண்காணிப்பாளர் ப.மணிகண்டன், ஆய்வாளர் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!