சாலை அமைக்க  கோரப்பட்ட டெண்டரை நிராகரித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..!

சாலை அமைக்க  கோரப்பட்ட டெண்டரை நிராகரித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..!

சென்னையில் சாலை அமைக்க  கோரப்பட்ட டெண்டரை நிராகரித்ததை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை நகரில் சாலை அமைப்பதற்காக, மாநகராட்சியில் பேருந்து வழித்தட சாலைகள் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் கோரி விண்ணப்பித்த டி.எஸ்.ஆர். என்ற நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

சென்னையின் ஜீரோ பாயிண்ட்  எனப்படும் முத்துசாமி பாலத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் தார் கலவை ஆலை அமைந்துள்ளதாக கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், தங்கள் நிறுவனத்தின் தார் கலவை ஆலை மறைமலைநகரில் அமைந்துள்ளதாகவும், தங்கள் நிறுவனம் தென் சென்னை பகுதியில் தான் சாலை அமைக்க டெண்டர் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர், டெண்டர் நிபந்தனைகளை, டெண்டர் வெளியிட்ட மாநகராட்சி தான் விளக்கமுடியும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேசமயம், டெண்டர் பெற்ற நிறுவனங்களின் தார் கலவை ஆலை 40 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தால், அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என அனுமதியளித்து நீதிபதி சவுந்தர்  உத்தரவிட்டுள்ளார்.