மானாமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் உரம் விநியோகம்...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் உரம் விநியோகம் செய்யப்பட்டது.

மானாமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் உரம் விநியோகம்...

மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பி நெல் நடவு பணிகள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும் சிவகங்கை மாவட்டத்தில் தாமதமாகவே மழை பெய்தது. மேலும் வைகை ஆற்றில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மழை நீர் வந்த வண்ணம் உள்ளது.

மானாமதுரை, திருப்புவனம் தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 166 கண்மாய்கள் உள்ளன. இதில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கண்மாய்கள் நிரம்பி விட்டன. மானாமதுரை மற்றும் திருப்புவனம் தாலுகாக்களில் சுமார் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 

இந்தாண்டு கண்மாய்களில் நீர் இருப்பு அதிகளவில் இருப்பதால் சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும் யூரியாவின் தேவையும் அதிகரிக்க வாயப்புள்ளது. இதனால் விவசாயிகள் நடவு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். என் எல் ஆர், கோ51, கல்சர் பொன்னி, கர்நாடக பொன்னி உள்ளிட்ட 120 நாள் பயிர் வகைகளே அதிகளவில் பயிரிடப்படுகிறது.

நெல் நடவு பணிகள் முடிந்து அடுத்து நாற்று பறித்து நடவு செய்த வயல்களில் உரத்தேவை அதிகம், யூரியா உள்ளிட்டவைகள் தற்போது தேவை அதிகமாக உள்ளது. அரசு கூட்டுறவு சங்கங்களில் யூரியா கிடைக்காததால் விவசாயிகள் தனியார் உர கடைகளில் யூரியா வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். 

தனியார் உர கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் யூரியா விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் தினசரி கண்காணித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தனியார் உர கடைக்கு யூரியா வந்ததையடுத்து சுற்றுவட்டார கிராம விவசாயிகள் யூரியா வாங்க வரிசையில் காத்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்ததையடுத்து மானாமதுரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.