மாவட்ட ஆட்சியர் அலட்சியம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அறிக்கை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார்!

மாவட்ட ஆட்சியர் அலட்சியம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அறிக்கை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான முழு விசாரணை அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். போராட்டத்தின் போது மக்கள், குருவிகளைப் போல சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி., திருநெல்வேலி சரக டிஐஜி உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

13 பேர் சுட்டுக்கொலை:

2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை :

2018ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய விசாரணை முடிவடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான முழு அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் முதலமைச்சரிடம் சமர்பித்தார். இதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - 20 அமைப்புகளிடம் விசாரணை நடத்திட  சி.பி.ஐ முடிவு! | Thoothukudi gunfight incident CBI decides to investigate  20 organizations

போலீசார் மீது நடவடிக்கை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார் என்றும், ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலட்சியம்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே, அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் மிக அலட்சியமாக அணுகியதாகவும், வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பொறுப்புகளை தட்டி கழித்துவிட்டு ஆட்சியர் வெங்கடேசன் கோவில்பட்டியில் இருந்ததாகவும், எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்ததாகவும் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வரம்பு மீறிய போலீசார்:

ஸ்டெர்லைட் போராட்டத்தில், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்றும், குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. துணை தாசில்தார்கள் சேகர், சந்திரன், கலால் அலுவலர் கண்ணன் ஆகியோரிடம் போலீசார் விருப்பம்போல உத்தரவு பெற்றுள்ளனர் எனக்கூறியிருக்கும் விசாரணை ஆணையம், துணை தாசில்தார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. 

நடவடிக்கை எடுக்கப்படும்:

போராட்டத்தின்போது, தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளதாகவும் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.