விடுமுறை நாளில் பணி செய்தவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்..! உயர்நீதிமன்றம் உத்தரவு...!!

விடுமுறை நாளில் பணி செய்தவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்..! உயர்நீதிமன்றம் உத்தரவு...!!

விடுமுறை நாளில் பணி செய்தவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள்  தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு தினம் பணியாற்றியவர்களுக்கு இரட்டை சம்பளம் வழங்க வேண்டுமென கூடங்குளம் அணுமின் நிலைய தொழிலாளர்கள் தரப்பில் நிர்வாத்தினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தினர் அதனை நிராகரிக்கவே இது தொடர்பாக உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

கூடங்குளம் அணுமின் நிலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு 14.8.2018 அன்று தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் எங்கள் சங்கத்தினர் பணியாற்றினர். தேசிய விடுமுறை நாளன்று பணியில் ஈடுபடுவோருக்கு அன்றைய தினத்திற்கு இரு மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். நிர்வாகத்தினர் எங்களுக்கு பொருந்தாது எனக்கூறி இரட்டை பணப்பலன் தர மறுத்தனர். எனவே, தேசிய விடுமுறை நாளன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில்  பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஆலையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றும் நிலையில் பொதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அன்றைய தினம் சம்பந்தப்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றியுள்ளனர். தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டதால் அன்றைய தினம் பணியாற்றியவர்கள் இரட்டை சம்பளம் பெற தகுதியானவர்களே. எனவே சம்பத்தப்பட்டோருக்கு உரிய இரட்டிப்பு சம்பள பணப்பலன்களை வழங்க அணுமின் நிலைய இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.