குழந்தையாக மாறி பட்டாசை கொளுத்திப்போட்டு விளையாடிய போதை ஆசாமி...முகம் சுழித்த பொதுமக்கள்...

நாமக்கல் அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்பு பட்டாசை கொளுத்தி போட்டு , பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய போதை ஆசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

குழந்தையாக மாறி பட்டாசை கொளுத்திப்போட்டு விளையாடிய போதை ஆசாமி...முகம் சுழித்த பொதுமக்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வேண்டுமென்றால் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பது அவசியம் என மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டும் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு சான்றிதழ்களை காண்பிப்பவர்களுக்கு மட்டுமே மது வகைகள் கொடுக்கப்பட்டன.

இரண்டு நாள் பரபரப்பு அடங்கியவுடன் கேட்கும் அனைவருக்கும் மது வழங்குவது வாடிக்கையாக அமைந்துவிட்டது. இந்நிலையில், நாமக்கல் நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக  மது பாட்டில்களை வாங்கி குடித்த நபர் ஒருவர் போதை மயக்கத்தில் அங்கு சுற்றி திரிந்தார்.

அப்போது அங்கு இருந்த கடை ஒன்றில் பட்டாசுகளை வாங்கி தனது சட்டை பையில் நிரப்பி கொண்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்பு உள்ள மோகனூர் பிரதான சாலையின் குறுக்கே பட்டாசுகளை கொளுத்தி போட தொடங்கினார்.

இதனால் சாலையில் சென்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் சாலையில் சென்றவர்களை அநாகரிகமான வார்த்தைகளால் வசைப்பாடியும், சாலையின் நடுவே பட்டாசுகளை கொளுத்திப்போட்டு சென்ற போதை ஆசாமியின் செயல் அனைவரையும் முகம் சுளிக்க செய்தது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் பட்டாசை கொளுத்திப்போட்டு சென்ற இவர் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.