மியான்மரில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்

மியான்மர் எல்லையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கோடி மதிப்புள்ள 8 கிலோ போதைப் பொருளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

மியான்மரில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை அருகில் உள்ள காரனோடை சுங்கச்சாவடி பகுதியில் அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது டாட்டா ட்ரக் ஒன்றை சோதனை செய்த அதிகாரிகள், அதில் இருந்த மரப்பெட்டியில்  எட்டு டீ பாக்கெட்டுகளில், 7 கோடி மதிப்புள்ள எட்டு கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். 

 தங்க மஞ்சள் நிறம் மற்றும் பச்சை நிறத்திலான கவரில்,  வெளிநாட்டு மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ள பாக்கெட்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அதனைதொடர்ந்து டாடா கார் ஓட்டுநர் ஜெகதீஸ்வரன் என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் சென்னையைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரமேஷ் என்ற இருவர் இந்தோ மியான்மர் எல்லை பகுதியில் இருந்து கிறிஸ்டல் வடிவிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்தது  தெரியவந்துள்ளது. ஓட்டுனர் ஜெகதீஸ்வரனிடம்  நடத்தப்பட்ட விசாரணை மூலம் மீஞ்சூர் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் இருவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மியான்மரில் இருந்து எல்லை வழியாக மணிப்பூரை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் உதவியோடு இந்தியாவிற்குள் போதைப் பொருளைக் கொண்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை கடத்தி வரப்பட்டு சிறுசிறு பாக்கெட்டுகளாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ,சொகுசு பார்ட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய கொண்டு வந்ததாக, பிடிபட்ட மாரியப்பன் மற்றும் ரமேஷ் தெரிவித்துள்ளனர். இதேபோன்று ஏற்கனவே பலமுறை போதைப்பொருள் கடத்தி வந்து உள்ளதாகவும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.