அதிமுகவில் இரட்டை பதவிகள் காலாவதி - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுகவில் உருவாக்கப்பட்ட இரட்டைப் பதவிளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படாததால் அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இரட்டை பதவிகள் காலாவதி - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுக சார்பில் ஒற்றை தலைமை தீர்மனத்துடன் சேர்த்து நேற்று நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்காக ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என நேற்றைய பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரின் அனுமதி இன்றி பொதுக்குழு கூட்டப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து செய்தியளர் சந்திப்பில் விளக்கமளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்,  ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்றார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகியதாகவும், 1. 12.2021 செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு நேற்றைய பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காததால் காலாவதியானதாகவும் தெரிவித்தார்.  ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு பொதுக்குழுவில் அங்கீகரிக்க படவில்லை என்றார்.

இதனிடையே, ஒ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணப்பாளர் என்றும், எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டு பேசினார்.