"காவிரி நீரை பெறுவதற்கு திமுகவிற்கு துணிச்சல் இல்லை" எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!!

காவிரியில் இருந்து உரிய நீரைப் பெறும் துணிச்சல் திமுகவிற்கு இல்லை என்று எதிர் கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் குறித்து, எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது, அவர், காவிரி விவகாரத்தில், திமுக அரசு, மத்திய அரசிடம் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். அத்துடன் காவிரி விவகாரத்தில் உரிய நீரைப் பெறுவதில்,  அதிமுகவுக்கு இருந்த துணிச்சல், திமுகவிற்கு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

எதிர் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின்  மறுப்பு தெரிவித்து பேசியதால், அவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

துணிச்சல் குறித்து எதிர் கட்சித் தலைவர் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய முதலமைச்சர், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அமைதியாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கருதுகிறாரா எதிர்க்கட்சித்தலைவர் என்று காட்டத்துடன் கூறினார். 

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும், காவிரி தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார்