வீடு லீசுக்கு கொடுத்த பணத்தை மீட்க கோரி மூதாட்டி தர்ணா...!

வீடு லீசுக்கு கொடுத்த பணத்தை மீட்க கண்ணீருடன் போராடும் மூதாட்டி...புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறையினர் ...தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி

வீடு லீசுக்கு கொடுத்த பணத்தை மீட்க கோரி மூதாட்டி தர்ணா...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீடு லீசுக்கு கொடுத்த பணத்தை மீட்டு தரக்கோரி செண்பகவல்லி என்ற மூதாட்டி திடீரென உரிமையாளர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து போலீசார் மூதாட்டி மற்றும் வீட்டின் உரிமையாளர் கண்ணன் என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி செண்பகவல்லி (60). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மந்திதோப்பு சாலையில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரிந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் லீசுக்கு மூதாட்டி செண்பகவல்லி குடியேறி உள்ளார். இதற்கிடையில் வீட்டின் உரிமையாளர் கண்ணன் வீடு விற்பனை செய்ய உள்ளதாகவும், காலி செய்தால் லீஸ் பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து செண்பகவல்லியும் காலி செய்து, காமராஜர் நகரில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் கண்ணன் பணம் கொடுக்கவில்லை, மேலும் அந்த வீட்டையும் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி செண்பகவல்லி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். அவரின் உத்தரவுன்படி, மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அங்கும் அவருக்கு நியாயம் கிடைக்காததால், நீதிமன்றத்தில் உள்ள அரசின் இலவச சட்ட உதவி மையத்திலும் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. தனது லீஸ் பணத்தை பெற்றுத் தரும்படி காவல்துறையில் கேட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால், ஜோதி நகர் 7வது தெருவில் உள்ள கண்ணன் வீட்டு முன்பு செண்பகவல்லி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், செண்பகவல்லியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு, முதலில்  ரூ 50 ஆயிரமும், பின்னர் மாதம் தோறும் ரூ 1 லட்சம் வீதம்  ரூ. 3 லட்சம் தருவதாக கண்ணன் போலீசரிடம் தெரித்துள்ளதாக கூறப்படுகிறது