எண்ணூர் அனல் மின் நிலையம், ரூ.10.38 கோடி விடுவிப்பு!!

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 10.38 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திட்டப் பிரிவு தலைமைப் பொறியாளர் மோகன் வெளியிட்ட உத்தரவில், எண்ணூர் அனல் மின் நிலையத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 10.38 கோடி விடுவிக்கப்படுவதாகவும், இதனை திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை தலைவரிடம் வழங்குவதன் மூலம் அனல் மின் நிலையத்தின் சுற்றுப் புறத்தில் உள்ள 10 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் நிரந்தர உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு, காட்டூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் நூலகம், சமூக நலக்கூடம், நியாயவிலைக்கடை, தண்ணீர் தொட்டி, நெல் சேமிப்பு கிடங்கு, அங்கன்வாடி உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது