மாலைமுரசு செய்தி எதிரொலி ; அரசு பள்ளியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல்

மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திமேரூரில் மேற்கூரை இடிந்து விழுந்த அரசு பள்ளியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டிடங்கள் சுமார் 1972 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பள்ளியில் சுமாா் 1500 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் பள்ளியின் மேற்கூறையானது அடிக்கடி இடிந்து விழுந்து வந்தது.

இதுகுறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இதனை அடுத்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட உயர் அதிகாரிகள் இந்தப் பள்ளியை பார்வையிட்டனர்.

இதனை அடுத்து இந்தப் பள்ளிக்கு 63. 54 லட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளியில் வேதமடைந்து இருந்த ஒரு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு அதில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தையும் பார்வையிட்டார்.

இதையும் படிக்க   | "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" - அமமுக பொதுக்கூட்டத்தில் விவாதம்