"எந்த கட்சிக்கும் வழக்கறிஞர்கள் தான் தேவை" ஆ.ராசா கருத்து!

"எந்த கட்சிக்கும் வழக்கறிஞர்கள் தான் தேவை" ஆ.ராசா கருத்து!

எந்த கட்சிக்கும் வழக்கறிஞர்கள் தான் தேவை  என  முன்னாள் அமைச்சர் ஆ ராசா தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆராசா வழக்கறிஞர் அணியினருக்கு ஆலோசனை வழங்கினார். 

அப்போது பேசிய அவர், முதலில் உங்கள் ஆளுமை, தனிப்பட்ட அந்தஸ்தான பொருளாதரத்தில் நல்ல நிலமையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நீங்கள் கட்சிக்கு உதவிட முடியும். வழக்கறிஞர் தொழில் சாகும்வரை அப்டேட் செய்துக் கொள்கிற தொழில் ஆகும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் வழக்கறிஞராக இருந்த போது அட்டர்னி ஜென்ரலை நீதிமன்ற கூண்டுக்குள் ஏற்றி 45 நிமிடம் விசாரித்தேன் என்ற அவர், அந்த வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு தான் உள்ளது என தெரிவித்தார். 

எந்த கட்சிக்கும் வழக்கறிஞர்கள் தான் தேவை என குறிப்பிட்ட அவர், இந்திய சுதந்திரத்திற்கு  போராடிய தலைவர்கள் சட்டம் படித்தவர்கள். காந்தி, நேரு என தலைவர்கள் சட்டம் படித்தவர்கள் தான். சட்டம் படித்தவர்களுக்கு அதிக சமூக அக்கறை  இருக்கும் என்பது உலகறிந்த உண்மை ஆகும் என்றார்.

இந்திய நாட்டில் அனைத்து நிறுவனங்களும் தரம் குறைந்து வருவதாக விமர்சித்த ஆ.ராசா அன்று இருந்த உச்ச நீதிமன்றம், பிரதமர் அலுவலகம், பாராளுமன்றத்தின் தரம் இன்று இல்லை என்றார். மேலும், நீங்கள் இருக்கும் நீதிமன்றங்களில் தரம் குறையாமல் திமுக வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் வழக்குகளிலோ சட்டத்திலோ ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்.ஆர்.இளங்கோவை கேளுங்கள் என்ற ஆ.ராசா, அதையும் கடந்து சந்தேகம் இருந்தால் தன்னிடம் கேட்குமாறும் தெரிவித்தார். 

இதையும் படிக்க: சிங்கப்பூரின் அதிபராக தமிழர் தேர்வு...! யார் இந்த தர்மன்?