சிவகாசி பட்டாசு வெடி விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13  ஆக அதிகரித்துள்ள நிலையில், பட்டாசு கடை உரிமையாளர், மேற்பார்வையாளர், மேலாளர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த ரெங்கபாளையம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் முன்புறத்தில்  செயல்பட்டு வரும் குடோனில், பட்டாசுகளை sample பார்ப்பதற்காக வெடித்து பார்த்துள்ளனர். அதிலிருந்து தீப்பொறி கடைக்குள் விழுந்ததில் கடையில் இருந்த மொத்த பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதில், கட்டடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. 

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு இறந்து கிடந்த 6 பேரின் உடல்களை மீட்டனர்.  மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  

இதையும் படிக்க : அலுவலகம் பூட்டியிருந்ததால் காத்திருந்து சோதனை... வருமான வரித் துறையினர் காலை முதல் அதிரடி!

இந்த நிலையில் மேலும் 7  பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால்  பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த அழகாபுரியைச் சேர்ந்த சின்னத்தாய் என்பவர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பொன்னுத்தாய் என்பவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த தென் மண்டல டிஐஜி ரம்யா பாரதி ,மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  இதனை தொடர்ந்து விபத்து குறித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த எம். புதுப்பட்டி போலீசார், தொழிற்சாலை மற்றும் பட்டாசு கடையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, தொழிற்சாலையின் மேற்பார்வையாளர்  கனகராஜ், பட்டாசு கடையின் மேலாளர்  ராம்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.