61 நாட்களுக்குப்பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்... மீன்வரத்து அதிகரித்ததால் மகிழ்ச்சி!

மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீன்வரத்து அதிகரித்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

61 நாட்களுக்குப்பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்... மீன்வரத்து அதிகரித்ததால்  மகிழ்ச்சி!

தமிழகத்தில், 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியில், 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், திருக்கை, பால்சுறா, வஞ்சிரம் உள்ளிட்ட ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர்.

இதேபோல், ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற மீனவர்கள், எதிர்பார்த்ததை விட அதிகமாக இறால், நண்டு உள்ளிட்டவை கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். 600க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் சென்ற நிலையில், அத்துமீறி நுழைந்ததாக இலங்கை கடற்படையினர், சில படகுகளை விரட்டியடித்த நிகழ்வும் அரங்கேறியது. 

புதுக்கோட்டையில், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்குச்சென்ற மீனவர்கள், வழக்கத்தை விட அதிகமாக மீன், இறால், நண்டு உள்ளிட்டவற்றை பிடித்து வந்ததாக தெரிவித்தனர். கடன்பெற்று டீசல் வாங்கி கடலுக்குச் சென்ற போதும், ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ நண்டு, 200 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதாக கவலை தெரிவிக்கின்றனர்.