மூக்கனேரி நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு...!

சேலத்தில் தொடா் மழை காரணமாக கன்னங்குறிச்சி அருகே உள்ள மூக்கனேரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

மூக்கனேரி நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு...!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று நள்ளிரவு ஏற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஏற்கெனவே ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள புது ஏரி நிரம்பிய நிலையில், கன்னங்குறிச்சி, மூக்கனேரிக்கு மழை நீா் அதிகளவில் வந்தது. இதனிடையே இன்று அதிகாலை மூக்கனேரி நிரம்பி வழிந்தது.

இந்த ஏரி நிரம்பியதால், கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் தண்ணீா் பெருக்கெடுத்து வெளியேறியது. இந்த நீா் அருகில் உள்ள தெருக்களில் புகுந்து வெள்ளம் போல ஓடியது.  மேலும் ஏரி நீர் சாக்கடை நீருடன் கலந்து தெருக்களில் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதை அடுத்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு சாக்கடைகளை தூர் வரும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.