சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்...3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு  மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  போராட்டம் நடத்தப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க : மனைவியை தீர்த்துக் கட்டிய கணவன்...கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த உண்மை...! 

நாமக்கல் பூங்கா சாலையில் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு  சாலை மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை  போலீசார் கைது செய்தனர்.

கடலூரில் அரசு பள்ளிகளுக்கு தமிழக முதலமைசசர் அறிவித்த காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.