100 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி

100 நாட்களில் அளித்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்து சுமார் 1புள்ளி 5 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  

100 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி

மோசடிக்காரர் தியாக பிரகாசம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சல் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். www.aangeltrading.com என்ற வலைதளம் மூலம் 100 நாட்களில் அளித்த பணத்தை இரட்டிப்பாக்கி திருப்பி அளிக்கப்படும் என்ற விளம்பத்தை வெளியிட்டு தியாக பிரகாசம் வாடிக்கையாளர் களை ஈர்த்து வந்துள்ளார். இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர்  கோடிக் கணக்கில் பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.

முதலில் ஆட்களை சேர்க்கும் நபருக்கு 5 ஆயிரம் என வழங்கி ஆசையை தூண்டியதை அடுத்து வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். வசூல் செய்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து தலைமறைவானவரை சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில்  மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வலைதள கணக்கு வாயிலாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை தாம் வைத்திருந்ததாகவும், அவர்களிடம் இருந்து பெற்ற தொகை சுமார் 100 கோடியை தாண்டும் எனவும் தியாக பிரகாசம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து போலீசார் தியாக பிரகாசத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுவரை பெறப்பட்ட 46 புகார்களுக்கான தொகை மட்டுமே 1புள்ளி 5 கோடி எனவும், அவர் வாக்குமூலத்தின் படி இன்னும் ஏராளமானோர் பாதிக்கப் பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது  இவர் மோசடி செய்த தொகை 100 கோடி வரை இருக்கும்  என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.