தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை: காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் கோவில்களுக்கு அனுப்பி வைத்ததுடன், சிலைகளை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

தடையை மீறி வைக்கப்பட்ட  விநாயகர் சிலை: காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு தடையை மீறி விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னனி அமைப்பினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மூன்று சக்கர சைக்கிளில் விநாயகர் சிலையை வைத்து, அதனை பேருந்து நிலையம் நோக்கி ஊர்வலமாக எடுத்து சென்றபோது கைது செய்யப்பட்டனர். 2 விநாயகர் சிலைகள் மற்றும் மூன்று சக்கர சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை காவல் நிலையம் எடுத்து சென்றனர். இதனால் கோபி பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சென்னை மதுரவாயல் பகுதியில் போலீசார் அனுமதியுடன் மூன்று அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர் சிலைக்கு காவி நிற முகக்கவசம் அணிவிக்கப்பட்டதால், இன்று மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலையை எடுத்து சென்று கரைக்க வேண்டும் என்றும், அப்போது பொதுமக்கள் அதிகளவு கூடக்கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரத்தில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம நிர்வாக அலுவலர் அமீர்பீவி,  விநாயகர் சிலையை கைப்பற்றி அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அனுப்பி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியில் பா.ஜ.க. சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தகவலறிந்த போலீசார், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு விநாயகர் சிலையை கொண்டு சென்றனர். இதைப்போல மேட்டுப்பட்டி, கோவிந்தாபுரம், ஆர்.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினரால் வைக்கப்பட்ட சிலைகள், அருகில் உள்ள கோயில்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த இந்து அமைப்புக்கள்  திட்டமிட்டுள்ளதால், போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி விநாயகர் ஊர்வலம் நடத்த முயன்ற இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்த இந்து முன்னணியினர், அருகில் உள்ள ஆனந்த விநாயகர் கோயிலுக்கு சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல முற்பட்டனர். தகவலறிந்த போலீசார், ஊர்வலம் நடத்தக் கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னனியினர், விநாயகர் சிலையை வீதியில் வைத்து பஜனை செய்ய, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.