குட்கா உற்பத்தி மற்றும் விற்பனை அமோகம்... குட்கா உற்பத்தியை தடைசெய்ய  அரசு அதிரடி உத்தரவு

குட்கா உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குட்கா உற்பத்தி மற்றும் விற்பனை அமோகம்... குட்கா உற்பத்தியை தடைசெய்ய  அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனையாவது அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
மாவட்ட ஆட்சியர் தலைமையில் எஸ்.பி. , வருவாய் அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழு, மாவட்டம் முழுவதும் குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி,மாவட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு குட்கா விற்றால் எதிர்கொள்ள வேண்டிய சட்டம் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்கள் விற்பனை பற்றிய தகவலை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் தொடர்பாக   94440 - 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் வாயிலாக புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.