அரசு பள்ளியின் அஜாக்கிரதையால் பதிப்படைந்துள்ள மாணவி... கை கொடுக்குமா அரசு?

அரசு பள்ளியின் அஜாக்கிரதையால் பதிப்படைந்துள்ள மாணவி... கை கொடுக்குமா அரசு?

அரசு பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவியின் சிகிச்சைக்கு உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாணவியின் தாயார்.

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜ் - ஜெனிபரின் மகள் திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 5 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து அறுந்து தொங்கிய வயரில் இருந்து  மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி படுகாயமடைந்துள்ளார். இதனால் அவருக்கு முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்காததால், மாணவியின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது காதுகள் பாதிக்கப்பட்டு விட்டதால், 90 சதவீத கேட்கும் திறன் இழந்து விட்டதாக கூறி உள்ளனர்.

அரசு பள்ளியின் அஜாக்கிரதை காரணமாக மின்சாரம் தாக்கி சிறுமிக்கு அடிபட்ட நிலையில், அரசோ, பள்ளி நிர்வாகமோ உதவ முன்வரவில்லை எனவும், தனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் அவரது தாய் ஜெனிபர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில், ‘ திருப்பூர் செரங்காட்டில் வசிக்கும் நான் கூலி வேலை செய்து வருகிறேன். மகள் மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, எனது மகளை குறை சொல்கிறார்கள். எனது மகளுக்கு முழங்கை, தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.  மேலும் கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செலவு செய்யுமளவுக்கு வசதி இல்லை. தமிழ்நாடு அரசு எனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க || "சர்ச்சைக்குரிய படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அதிர்ச்சியளிக்கிறது" முதலமைச்சர் ஸ்டாலின்!