ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை...!

ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை...!

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள 18ம் நூற்றாண்டு காலத்தின் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்த செல்கிறார்.

தீரன் சின்னமலை நினைவு தினம்:

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின்  217 வது  நினைவு தினம், ஆகஸ்ட் 3ஆம் தேதி  அரச்சலூர் அருகே ஓடநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அனுசரிக்கப்பட இருக்கிறது.

2003 ஆம் ஆண்டு, மாநில அரசு அவரது பிறந்த ஊரான ஓடநிலையில் அவரது நினைவு தினத்தை ஆண்டு தோறும் அரசு விழாவாக அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. 2006 ஆம் ஆண்டு ஓடாநிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டது. மேலும், தீரன் சின்னமலையின் அரசு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஆண்டு தோறும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று அரச்சலூர் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில் காலை 11. 30 மணி முதல் 12 மணி வரை கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிகிறது. பின்னர், ஜெயராமபுரம் கிராமத்தில் கொங்கு சமூக ஆன்மிக கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று ஆளுநர் உரையாற்றுகிறார்.

தீரன் சின்னமலை:

மேற்கு தமிழ்நாடு முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த காலகட்டம் அது. மைசூர் அரசால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி, அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்துள்ளார். வரிப்பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரனிடம், ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் உள்ள சின்னமலை வரிப்பணத்தைப் பறித்ததாகச் சொல்’, எனக் கூறி அனுப்பினார். அன்றிலிருந்து, தீர்த்தகிரி ‘சின்னமலை’ என அழைக்கப்படுகிறார்.