டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐந்து நாள் பயணமாக சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து  டெல்லி புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வரும் கருத்துகள் அனைத்துமே தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, சனாதனம் குறித்து பேசி வருவது, சமீபத்தில் வள்ளலார் குறித்து பேசியது என அவர் எந்த விசயம் குறித்து பேசினாலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றுக்கூட தமிழ்நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகளுக்கு தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு திறன் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதோடு திமுக அரசு மீது அதிமுக, பாஜக தரப்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி ஆளுநர் ஆர் என் ரவியை திரும்ப பெற கோரி மதிமுக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், அவர் தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர மாநில அரசு அரசானை பிறப்பித்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில், டெல்லி பயணம் மேற்கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இதன்படி இன்று டெல்லி  செல்லும் ஆளுநர் ஜூன் 27 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகர்களில் அதிமுகவினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆர்பாட்டம் நடத்தனர். இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் விரைவில் திமுக ஆட்சி கலைக்கப்படும் செய்தி வரும் என்றும் அன்றுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு தீபாவளி என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.