கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம்... மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் கவலை...

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம்... மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் கவலை...

பருவமழை தீவிரமடைந்ததையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள 187 ஏரிகள் நிரம்பி உள்ளதால், அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மதுராந்தகத்தில் திரும்பு திசை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  ஏரி சாய்ராம் நகர் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால், சுமார் 500 வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மக்களும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டிற்குள் புகுந்த மழைநீருடன் தேங்கிய கழிவு நீரில் தூங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் இதே நிலை நீடிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் மழை நீரை அகற்றி, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுவாஞ்சேரியில் உள்ள பெரிய ஏரி நிரம்பியுள்ளதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், சிவா அவென்யூ உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு, சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட பணியை கூட செய்ய முடியாதபடி எங்கும் மழை வெள்ளம் தேங்கியிருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த பகுதி வீடுகளை உடனடியாக அதிகாரிகள்  பார்வையிட்டு, அங்கு தேங்கி இருக்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.