நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்...!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி மற்றும் பவானிசாகர் ஊராட்சியின் அலுவலகம் முன்பு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஊதிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டத்தில் ஈடுபட்டனர், அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் பேரணியாக சென்று  வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முருக்கம்பட்டு ஊராட்சியில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட  அட்டவணைப்பிரிவு பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்காமலும், புதிய வீடு, சுகாதார கழிப்பறைகள் கட்டுவது போன்ற சலுகைகள் அனைத்தும் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கான உரிமையை வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.