ஐஐடி மாணவர்கள் விவகாரம்: அறிக்கையை சமர்ப்பித்தது திலகவதி தலைமையிலான குழு..!

ஐஐடி  மாணவர்கள் விவகாரம்:  அறிக்கையை சமர்ப்பித்தது திலகவதி தலைமையிலான குழு..!

ஐஐடியில் மாணவர்களின் தொடர் தற்கொலை குறித்து பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சென்னை ஐஐடி-யிடம் வழங்கியது.

இதனையடுத்து தற்போது, பல்வேறு பரிந்துரைகளை வலியுறுத்தும்  250-300 பக்க அறிக்கையை  திலகவதி தலைமையிலான குழு வழங்கியுள்ளது.

ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் பேராசிரியர்களிடையே இணக்கமான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் ஐஐடி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த குழுவில், திலகவதி ஐபிஎஸ் -உடன், சபிதா ஐஏஎஸ், கண்ணகி பாக்கியநாதன் ஐஏஎஸ், பேராசிரியர் ரவீந்திர கெட்டு மற்றும் அமல் மனோகரன் ஆகிய 5 பேர் கொண்ட குழு இடம்பெற்றிருந்தனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் 15-க்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் மார்ச் வரை 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மார்ச் 31-ஆம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஏப்ரல் 25-ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது.

திலகவதி தலைமையிலான குழுவினர் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டவர்களுடன் நேரிலும் ஈமெயில் வாயிலாகவும் விசாரணை நடத்தி கருத்துக்களை பெற்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க    |  முல்லை பெரியாறில் இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்க மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி!