நீட் தேர்வால் மறைந்த மாணவரின் நண்பன் ஆவேசம்...!

நீட் தேர்வால் மறைந்த மாணவரின் நண்பன் ஆவேசம்...!

நீட் தேர்வு சி.பி.எஸ்.சி மாணவர்கள் எங்களுக்கே இவ்வளவு கடினம் என்றால், அரசு மாணவர்களின் நிலை கேள்விகுறி தான் என்று உயிரிழந்த ஜெகதீஸ்வரனின் நண்பன் கண்ணீர் மல்க கூறினார். 

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் மத்திய கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மருத்துவப் படிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். ஆனால், இரண்டு முறையும் குறைந்த அளவு மதிப்பெண்கள் பெற்றதால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக  நீட் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையத்திற்கு செல்ல கட்டணம் செலுத்தியிருந்தார். இதனிடையே, தன்னுடன் படித்த மாணவர்கள் யாரும் மீண்டும் நீட் தேர்வு பயிற்சிக்கு வராததால் மனக்குழப்பத்தில் இருந்த ஜெகதீஸ்வரன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மகனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க : ”பள்ளி மாணவர்களின் சாதி சண்டைக்கு திரைப்படங்கள்தான் காரணம்” நடிகர் டெல்லி கணேஷ் பரபரப்பு பேட்டி!

நீட் தேர்வால் இரண்டு உயிர்கள் பறிப்போன நிலையில், உயிரிழந்த மாணவனின் நண்பன் பயாஸ் என்பவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெகதீஸ்வரன் தற்கொலைக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என்று கூறினார். 520 கட் ஆஃப் என்றால் 519 மதிப்பெண் எடுத்தால் கூட அரசு இடம் கிடைக்காது என்றும், நுழைவுத்தேர்வு வேண்டுமென்றால் எதற்காக 12 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்றும், சி.பி.எஸ்.சி மாணவர்கள் எங்களுக்கே இவ்வளவு கடினம் என்றால் அரசு மாணவர்கள் நிலை கேள்விகுறி தான் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், பணம் படைத்தவர்கள் தான் நீட் தேர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களா? பணம் இருந்தால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா? மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வுக்கு முன்பு படித்து தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தகுதியானவர்கள் இல்லையா? இது ஸ்டேட்டஸ் போட்டு ஸ்டோரி போட்டு விட்டு கடந்து போகும் விஷயம் இல்லை என்றும் கண்ணீர் மல்க பேசினார்.