" முதலமைச்சருக்கு திறமை இருந்தால் உதய் திட்டத்தில் இருந்து வாபஸ் பெறட்டும் " - அதிமுக எம்.பி. தம்பிதுரை .

" கல்வித்துறையின் எல்லா அதிகாரமும் சென்றதற்கு காரணம் திமுக தான் "

"  முதலமைச்சருக்கு  திறமை இருந்தால் உதய் திட்டத்தில் இருந்து வாபஸ் பெறட்டும் "   -    அதிமுக எம்.பி. தம்பிதுரை .

 மாநில சுயாட்சி என ஸ்டாலின் பேசுவது கண் துடைப்பு , கல்வித்துறையின்  எல்லா அதிகாரமும் சென்றதற்கு காரணம் திமுக தான்  என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.  

கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மாணவர்கள் கல்வியில் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதேபோல் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதிகள் மக்களுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும், 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்தது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என குறிப்பிட்டு,  காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக ஏன் நீட்டை தடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். 

அதோடு, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் திமுக 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன வந்தது? என பட்டியலிட்டு சொல்லும்படி  முதலமைச்சர் ஸ்டாலினை  வினவுதாகவும் கூறினார். அதன்பின்னர், பிறகு பாஜக 9 ஆண்டுகால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கூறுகிறோம் என்று விமர்சித்தார்.

 தொடர்ந்து,  மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வு மத்திய அரசு முழுவதும் நடத்த உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய அரசின் இது போன்ற செயல்பாடுகளுக்கு அடிப்படை காரணம் என்றும், திமுக தான் 1976 ஆம் ஆண்டு 'எமர்ஜென்சி' காலத்தில் கல்வித்துறையை மாநில பட்டியலில் இருந்து மத்திய பொது பட்டியலுக்கு மாற்றியது என்றும் குற்றம் சாட்டினார். 

அதோடு, இந்திராகாந்தியின் மறைவுக்கு பின் தான் திமுக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தது, அப்போது, மத்திய பட்டியலில் இருந்த கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு கொண்டுவர திமுக முயற்சி செய்தார்களா? அப்படி செய்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது என்றும் சாடினார்.  

 மேலும் அவர்,  " மாநில சுயாட்சி என ஸ்டாலின் பேசுவது கண் துடைப்பு , கல்வித்துறையின்  எல்லா அதிகாரமும் சென்றதற்கு காரணம் திமுக தான். நீட் தேர்வு நடத்துவது மத்திய அரசு அப்போது கலந்தாய்வு மத்திய அரசுதான் நடத்த வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது திமுக தான் அதற்கு அவர்தான் பொறுப்பு ",   என்று கூறினார்.

அதோடு, " மாநில சுயாட்சிகளை விட்டுக் கொடுக்கக் கூடாது, நீட் தேர்வு கூடாது,  மாணவர்கள் சேர்க்கை மற்றும் கல்வியை மாநில பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அதிமுக கொள்கை அதனை பாஜக பறிப்பது கண்டனத்திற்குரியது ", என்றும் அவர் தெரிவித்தார். 

 இதையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு உதய்  திட்டத்தில் அதிமுக கையெழுத்திட்டது தான் காரணம் என முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, 

" அதிமுக கையெழுத்து போட்டதால் மின்கட்டண உயர்வு என முதலமைச்சர் பேசுகிறார்;  அவருக்கு திறமை இருந்தால் உதய் திட்டத்தில் இருந்து வாபஸ் பெறட்டும். உதய் திட்டத்தில் குறைகள் இருந்தால் அந்த திட்டத்திலிருந்து பின்வாங்கட்டும் ",  என தெரிவித்தார்.

இதையும் படிக்க     | "பார்களை மூடினால் வருவாய் இழப்பு ஏற்படும்" தமிழ்நாடு அரசு வாதம்!