” கல்குவாரி பொருட்களின் செயற்கை விலை ஏற்றத்தை குறைக்க அரசு தலையிடாவிட்டால்,..... “ நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு.

” கல்குவாரி பொருட்களின்  செயற்கை விலை ஏற்றத்தை குறைக்க அரசு தலையிடாவிட்டால்,..... “    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு.

கல்குவாரி பொருட்களில் ஏற்பட்டுள்ள செயற்கை விலை ஏற்றத்தை அரசு தலையிட்டு குறைக்காவிட்டால் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த பணிகளை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருசங்கு தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பின் மாநில கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இந்த அமைப்பை சேர்ந்த மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களான மாநில நெடுஞ்சாலை துறை ஒப்பந்தாரர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் திருசங்கு பேசுகையில்:-

கல்குவாரியில் வழக்கமாக ரூ 1400 வரை விற்பனை செய்து வந்த கற்களின் விலை தற்போது ரூ 1000 உயர்ந்து 2400 மேல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயற்கையான விலை ஏற்றத்தால் 7 மீ அகலம் உள்ள ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலை அமைப்பதற்கு 10 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது. இந்த சூழலில் அரசு கொடுத்துள்ள ஒப்பந்த புள்ளியை விட சந்தையில் பொருட்களின் விலை அதிகமாக உள்ளதால். ஒப்பந்த தொகையில் இருந்து கூடுதலாக வழங்கப்படும் 5% போதவில்லை. 

இது ஒப்பந்த தாரர்களுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்திக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு கல்குவாரியில் உயர்த்தப்பட்டுள்ள செயற்கை விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், எங்களுக்கு வேறு வழியின்று ஒப்பந்த பணிகளை  நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும். எனவே அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல், ஆண்டிற்கு ஒருமுறை அரசு விலை நிர்ணயம் செய்யும் முன் கல்குவாரி உள்ளிட்ட சாலை மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்து ஆலோசித்து விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க   | காவிரி நீர் வேண்டி, பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!