தனித்து நின்றிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்... இனி வீரவன்னியர்கள் தான் தமிழ்நாட்டை ஆளனும் - ராமதாஸ்

கூட்டணி தர்மம் என்பதே இப்போதைக்கு இல்லாமல் போய்விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். 

தனித்து நின்றிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்... இனி வீரவன்னியர்கள் தான் தமிழ்நாட்டை ஆளனும் - ராமதாஸ்

சேலத்தில் பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

“சேலம் மாவட்டமும் தர்மபுரி மாவட்டமும் நான் பிறந்த மாவட்டத்தை விட நான் நேசிக்கும் மாவட்டங்கள். அதனால்தான் யானை சின்னத்தை நாம் பெற முடியாதபோது சேலத்து மாங்கனியை நமது சின்னமாக தேர்ந்தெடுத்தேன். பாமக தனித்து நின்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும், அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்தில்தான் தீர்மானம் போட்டீர்கள்.

ஆனால் தனியாக நின்ற நாம் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கூட பெற முடியவில்லை. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொன்னோம். ஆனால் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கூட நாம் பெறமுடியவில்லை. இது எதனால்? ஒட்டுமொத்த வட தமிழக வன்னிய மக்கள் வாக்களித்திருந்தால் அன்புமணி முதல்வராகியிருப்பார்.

ஆனால் அதற்குக் காரணம் யார்? வன்னியர்கள்தான் காரணம். வன்னியர்களுக்காக 42 ஆண்டுகளாக உழைத்து வருகிற நான் என்ன தவறு செய்தேன்? இந்த மக்கள் மட்டுமல்ல எல்லா சமுதாய மக்களும் வாழ வேண்டுமென்று விரும்புகிறவன் இந்த ராமதாஸ். 370 சாதி மக்களும் ஒரே தாய் மக்கள் என்று மனமார சொல்கிறவன் இந்த ராமதாஸ். ஆனால், போராடி வாதாடி 21 உயிர்களை பலி கொடுத்து பெற்ற இருபது சதவிகிதத்தில் அதில் எங்களுக்கு சேர வேண்டிய குறைந்தபட்ச 10.5% பெற அரும்பாடுபட்டேன். ஆனால் பிற சமுதாயத்தினர் கொதித்து எழுந்தார்கள்.

20 சதவிகித இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற சமுதாயங்கள் நீதிமன்றத்துக்கு சென்று நீதிபதியும் நமக்கு எதிராக தீர்ப்பு சொல்லி இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு தடையாணை பெறுவதற்காக நாம் சென்றிருக்கிறோம். வட தமிழகத்தில் ஒருவர் மேல் நாம் தடுக்கி விழுந்தால் அவன் வன்னியனாகத்தான் இருக்க வேண்டும். நாம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.

இவ்வளவு பெரிய சமுதாயம் 2 கோடி மக்களைப் பெற்றிருக்கிற சமுதாயத்தை நம்பி கட்சி ஆரம்பித்தால் நாம் யாரிடமும் போய் பிச்சை கேட்கவேண்டாம் என்றுதான் பாமக என்று கட்சியை ஆரம்பித்தேன். தனியாக நின்று ஒரு எம்.எல்.ஏ, பின் 4 எம்.எல்.ஏ. தனியாகவே நாம் நின்றிருந்தால் நாம் ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால் அப்போது பலர் தனியாகவே நிற்பதா, கூட்டணியில் நிற்போம் என்று சொன்னதால் கூட்டணி வைத்தோம்.

கூட்டு என்றால் பாமககாரன் உயிரை விட்டு மற்ற கட்சிக்கு வேலை செய்வான். ஆனால் கூட்டு என்று சொன்னால் இப்போது அதர்மமாகிவிட்டது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். அதற்கும் குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நாம் கூட்டணி தர்மத்தை பிற கட்சிகள் மீறியதால் 5 தான் வென்றோம்.

முதலில் 5 என்றார்கள்...பின் 8 என்றார்கள் ஜி.கே.மணி போய் பாவமாக பேசினார். பிறகு 15 என்றார்கள். அதன் பிறகு முன்னேறி 23 இல் வந்து நின்றார்கள். 234 தொகுதிகளில் வன்னியர்களுக்கு 23 தொகுதிகள்தான். நமக்கு ரோஷம் வேண்டாமா? மான உணர்ச்சி வேண்டாமா? நாம் மனு கொடுக்கும் கட்சியாக இருக்கக் கூடாது. மனு வாங்கும் ஜாதியாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போதும் எங்களுக்கு ரெண்டு சீட் போட்டுக்கொடுங்க என்று கேட்கவேண்டிய நிலை.

இந்தக் கட்சி தொடர்ந்து இதே நிலையில் அடுத்தவர்களிடம் கெஞ்சவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் ஏமாந்தது போதும். இனி தனியாகவே வீரவன்னியர்களாகவே நின்று தமிழ்நாட்டை ஆளுவோம். நான் எதற்கும் ஆசைப்பட மாட்டேன். என் சமுதாயம் ஆள வேண்டும். யாரோ எப்படியோ சம்பாதித்த பணத்துக்கு ஆசைப்பட்டு நம் மானம் மரியாதையை இழக்கப் போகிறோமா? ”என்று பேசினார் ராமதாஸ்.