சட்டவிரோத கருமுட்டை தானம்.. பாலியல் விவகாரத்தில் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது - சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு விசாரணை

ஈரோட்டில் சட்டவிரோத கருமுட்டை தானத்திற்காக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட  சிறுமியிடம்  சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.

சட்டவிரோத கருமுட்டை தானம்.. பாலியல் விவகாரத்தில் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது - சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு விசாரணை

ஈரோட்டில் உள்ள பிரபல மருத்துவ மனையில் சட்டவிரோதமாக சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாகவும்,  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் காவல்துறைக்கு புகார் வந்தது.இதன் அடிப்படையில்  விசாரணை நடத்திய ஈரோடு போலீசார், சிறுமியின் தாய் இந்திராணி, அவரது கள்ளக்காதலன் சையத் அலி மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோரை கைது செய்தனர்.

அத்துடன் சிறுமிக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதன தொடர்ச்சியாக சட்டவிரோத கருமுட்டை தானத்திற்கு வழிவகுத்த பிரபல மருத்துவமனைகளுக்கு  சம்மன் அனுப்பப்பட்டு அதன் நிர்வாகிகளிடம் தொடர்ந்து 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் அரசு காப்பகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சென்னையிலிருந்து வந்த மருத்துவ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். மேலும் இதில் தொடர்புடைய பிரபல சுதா மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.மருத்துவ குழுவினரின் ஆய்வுக்கு பிறகே சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது.