ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 வாலிபர்கள்... பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்...

தமிழகத்தில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 வாலிபர்கள்... பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் கிளை ஆற்றில் பாய்ந்தோடிய தண்ணீர், தரைப்பாலத்தை மூழ்கடித்து வீடுகள் மற்றும் பள்ளி வளாகத்தை சூழ்ந்து கொண்டது. இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனது. இதைப்போல கூலி தொழிலாளி செல்வம் என்பவரது வீடும் இடிந்து விழுந்து, வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. ஆற்றங்கரையோரம் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஐந்து வாலிபர்களை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். பாவளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், ஏழுமலை, கார்த்திகேயன், சூர்யா, பெரியசாமி ஆகியோர் அரசம்பட்டு மணிமுத்தாற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கனமழையால் திடீரென மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாலிபர்கள் 7 பேரும் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் ஏறி நின்றுள்ளனர். மேலும், தங்களை காப்பாற்றுமாறு சத்தம் கொடுத்துள்ளனர். இதனை கேட்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், வெள்ளத்தில் சிக்கியிருந்த 7 பேரையும் கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர். தயாஸ்தலம் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரில், வீட்டு உபயோக பொருட்கள் மிதக்கின்றன. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். சித்தேரி எனும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாத காரணத்தால், மழைநீர் வடியாமல் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் வடிகால் வாய்கால்களை தூர்வாரி, மழைநீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவனை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. விக்னேஷ் என்ற கல்லூரி மாணவன், கதவணி புதூர் பாம்பாறு ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கல்லூரி மாணவனை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால், அங்குள்ள கே. ஆர்.பி. அணை நிரம்பி வழிகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளிஅணை, பாரூர் அணை மற்றும் பாம்பாறு அணைகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில், அணைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மதகுகள் வழியாக பாய்ந்தோடும் தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் செந்நிறத்தில் கலந்து ஓடுகிறது. அணை மற்றும் நீரோட்டத்தின் கழுகு பார்வையிலான காட்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கவுண்டணியா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சந்தப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் வீடுகளிலேயே தங்கள் உடமைகளை விட்டு விட்டு வந்த மக்கள், சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் தங்களை கண்டு கொள்ளவில்லை என்றும், சமூக ஆர்வலர்கள் மட்டுமே தங்களுக்கு உதவி செய்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏரிகள் மற்றும் குளம் குட்டைகள் நிரம்பி, சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளத்தால் வாணியம்பாடி நகருக்குள் புகுந்த வெள்ளநீர், பல தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. அரசு பொது மருத்துவமனையை வெள்ளநீர் சூழ்ந்ததால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால், ஆற்று பாலம் மூழ்கி பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கடலூர் சின்னகுப்பம் மீனவர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் ஆற்று நீர் புகுந்ததால், அங்கிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் செய்யூர் எம்.எல்.ஏ. பாபு ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.