அதிமுக பொதுகுழுவில், கட்சிக்காரர்களை காப்பாற்ற வேண்டியது தலைமை கையில் தான் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கும் மெகா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். 

அதிமுக பொதுகுழுவில், கட்சிக்காரர்களை காப்பாற்ற வேண்டியது தலைமை கையில் தான் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  முதலமைச்சர், நீட் தேர்வுக்கான விலக்கு குறித்தான எல்லா விதமான முயற்சிகளையும் தொடர்ந்து வலியுறுத்தி தான் வருகிறார். ஆனாலும் கூட இந்த தேர்வுகள் வந்துவிட்ட நிலையில், ஆளுநரிடம் இருந்து அந்த மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசு தலைவரும், உள்துறை அமைச்சகமும் நல்ல முடிவெடுத்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும் மாணவர்கள் பயிற்சி பெறுவதில் இருந்து, எந்தவிதமான விலக்கும் அளிக்கப்படவில்லை. பயிற்சி பெற்றிருக்கிறார்கள், நிச்சயமாக இந்த தேர்வில் வெற்றி பெறுவார்கள் என கூறினார்.    

மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரை, 18 வயதை கடந்தவர்களில் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம், 94.68% ஆக உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் சதவீதம், 85. 47% பேருக்கும், புதுக்கோட்டையை பொறுத்தவரை, 18 வயதை கடந்தவர்களுக்கான முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம், 99% ஆக உள்ளது. மாநில அளவிலான சதவீதத்தை காட்டிலும், இந்த மாவட்டத்தில், கூடுதல் சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதே போல் இரண்டாவது தவணை தடுப்பூசி, 93% ஆக உள்ளது. இதிலும் புதுக்கோட்டை மாவட்டம் முன்னிலையில் உள்ளது என கூறினார். மேலும் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை அமோகமாக இருந்தது என்றும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆபரேஷன் ஒன்று மற்றும் இரண்டு நடத்தப்பட்டு கஞ்சா விற்றவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் கூறினார். 

இந்நிலையில் அவரிடம் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதுகுறித்து பேசிய அவர், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுக்குழுவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ள சூழ்நிலையில் அனைவரும் முகக் கவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மேலும் கட்சிக்காரர்களை காப்பாற்ற வேண்டியது தலைமை கையில் தான் உள்ளது என்றும் கூறினார் .